நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Wednesday, July 25, 2012

சவாரி பிடிப்பதில் தகராறு: ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை

சீர்காழி, ஜுலை. 23-

சீர்காழி அருகே உள்ள இரணியன் நகரில் வசித்தவர் சீனிவாசன் (40). சீர்காழி மாரியம்மன் கோவில் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி ராவ். இருவரும் ஆட்டோ டிரைவர்கள். கொள்ளிடம் முக்கூட்டில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.

சீனிவாசன் ஏற்கனவே நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சீனிவாசனுக்கும், சிவாஜிராவிற்கும் சீர்காழி ரெயில் நிலையத்தில் சவாரி பிடிப்பது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சிவாஜி ராவ், சீனிவாசனை நெஞ்சில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வலியோடு சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். தனது மனைவி கவிதாவிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். வீட்டிற்கு சென்ற சீனிவாசனுக்கு நெஞ்சு வலி அதிகரித்ததை தொடர்ந்து சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சீனிவாசன் மனைவி கவிதா சீர்காழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் - இன்ஸ்பெக்டர்கள் பன்னீர் செல்வம், சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சிவாஜிராவை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சீனிவாசனுக்கு விஷ்வா (9), நிதிஷ்குமார் (7) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

சீர்காழியில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.15 கோடி மோசடி

சீர்காழி,ஜூலை.21-
 
சீர்காழி தென்பாதி வி.என்.எஸ் நகரில் வசித்து வருபவர் நந்தக்குமார் (வயது 55), தேர் வடக்கு வீதியை சேர்ந்தவர் முரளிக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீர்காழியில் கனகதாரா சிட்பண்ட் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி வந்தனர்.
 
இந்தநிலையில் திடீரென அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் சீர்காழி போலீசில் புகார் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
 
கனகதாரா சிட்பண்ட் நிறுவனத்தில் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சேமிப்பு முதலீடு, ஏலச்சீட்டு, ஆகியவற்றில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக ஏலச்சீட்டு முடிந்தவர்களுக்கும், வைப்பு தொகை கொடுத்தவர்களுக்கும் பணம் தராமல் அலைகழிக்கப்பட்டனர்.
 
பணம் கொடுக்குமாறும் பலமுறை கேட்டும் ஏமாற்றமாட்டோம் பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று கூறினர்.தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாங்கள் பணம் கேட்கும் போது எங்களது அசையும், அசையா சொத்துக்களை விற்று அனைவருக்கும் பணம் தந்து விடுவதாக சொல்லி இதுவரை பணம் பட்டுவாடா செய்யவில்லை.
 
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக மேற்படி சீட்டு நடத்தி வந்த இருவரும் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது இரண்டு நாட்களின் வந்து விடுவோம் என்று கூறி பலரிடமும் வாங்கிய பல லட்சம் வழங்காமல் எங்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர்.
 
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதனால் மேற்படி சீட்டு கம்பெனியில் பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இந்த சீட்டு கம்பெனி மோசடியில் வியாபாரிகள், வக்கீல்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் பணம் கட்டி பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ரூ.15 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் சீர்காழியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சீட்டு கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்த சீர்காழி தக்காஸ் பகுதியை சேர்ந்த வரதராஜன் கூறியதாவது:-
 
கடந்த 20 ஆண்டுகளாக இந்த சீட்டு கம்பெனி இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் பணம் கட்டியவர்களுக்கு சரியான முறையில் வட்டி கொடுத்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணம் கட்ட தொடங்கினார்கள். டாக்டர்கள், தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் என முக்கிய பிரமுகர்களும் இங்கு பணம் கட்டி உள்ளனர்.
 
நான் கடந்த 2010 - ம் ஆண்டு முதல் பணம் கட்டி உள்ளேன். ரூ. 1 லட்சத்து 97 ஆயிரம் வரை பணம் கட்டி உள்ளேன். இது குறித்து சீட்டு கம்பெனி உரிமையாளர்களிடம் கேட்ட போது தனியார் கல்லூரியில் முதலீடு செய்துள்ளோம்.தியேட்டர் உள்ளது. பஸ் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறோம்.பணத்தை சரி செய்து விடுவோம் என கூறினார்கள். பணம் கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
சீர்காழி சீட்டு கம்பெனியில் முக்கிய பிரமுகர்கள் ரூ. 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் புகார் கொடுக்க பயப்படுகிறார்கள். வருமான வரித்துரை அதிகாரிகளுக்கு பயந்து அவர்கள் புகார் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

Wednesday, July 18, 2012

ரெட்டிக்கோடங்குடி-காடாக்குடி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: சக்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

வைத்தீஸ்வரன்கோவில் அருகே புங்கனூர் பஞ்சாயத்தில் ரெட்டிக்கோடங்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் அதிகபட்சமாக 15 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏனெனில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
 
இதனால் அருகில் உள்ள கிராமமான காடாக்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியுள்ளதால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. மேலும் 2 கி.மீ தூரத்தில் உள்ள புங்கனூர் பள்ளிக்கு சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே ரெட்டிக்கோடங்குடி - காடாக்குடி இடையே பாப்பான்ஓடை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைத்துக் கொடுத்தால் மாணவர்கள் குறைந்த தூரத்தில் வெகு சீக்கிரமாக பள்ளியை சென்றடைவார்கள்.
 
எனவே ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டுமென சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ. சக்தியிடம் கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த சக்தி எம்.எல்.ஏ. ரெட்டிக்கோடங்குடி - காடாக்குடி இடையே புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்குமாறு யூனியன் பொறியாளரிடம் கேட்டுக் கொண்டார். விரைவில் மாணவர்களின் நலன் கருதி பாலம் கட்டப்படும் என தெரிவித்தார்.
 
மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், ஊராட்சிமன்ற தலைவர் மகேந்திரன், கட்சி நிர்வாகிகள் ராஜு, பாலமுருகன், ஓப்பந்தக்காரர் இளையநாதன் உடனிருந்தனர்.

சாராய வேட்டையின் போது கார் மோதி போலீஸ் ஏட்டு பலி


சீர்காழி அருகே உள்ள பாகசாலை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தவர் ரவிச்சந்திரன் (40). மேலும் நடமாடும் மதுவிலக்கு சிறப்பு தனிப்படையிலும் இருந்து வந்தார்.
கடந்த 6 -ந்தேதி அதிகாலை கூத்தியம் பேட்டையில் சாராயம் கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை சப் -இன்ஸ்பெக்டர் சிங்காரம் தலைமையில் தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
இதில் ஏட்டு ரவிச்சந்திரனும் இடம் பெற்று இருந்தார். அப்போது புத்தூரில் இருந்து பழையாறு நோக்கி வந்த அம்பாசிடர் காரை நிறுத்த முயன்றனர்.
ஆனால் அந்த கார் ஏட்டு ரவிச்சந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
கார் மோதியதில் ரவிச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடல் நிலை மோசமானதை தொடர்ந்து தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்றிரவு 11. 30 மணிக்கு ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மோதி பலியான ஏட்டு ரவிச்சந்திரன் கடந்த 95 -ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். நாகை ஆயுதப்படையில் பணியாற்றினார். பின்னர் பாக சாலை போலீஸ் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார்.
இவர் குடும்பத்துடன் மயிலாடுதுறை அப்துல் காதர் நகரில் வசித்து வந்தார்.
இவரது மனைவி பெயர் எழிலரசி. இவர்களுக்கு தீபிகா என்ற மகளும் ஜெனதீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் ரவிச்சந்திரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மனித உருவில் அதிசய ஆட்டுக்குட்டி

மயிலாடுதுறை பகுதி இளையனூர் ஊராட்சி வடகரை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று நள்ளிரவு குட்டி ஈன்றது. அந்த ஆடு குட்டி போட முடியாமல் அலறியவாறு திணறிக்கொண்டு இருந்தது.
 
இதை பார்த்த கிராம பெண்கள் 3 பேர் வெகு நேரம் போராடி பிரசவம் பார்த்தனர். பின்னர் ஆடு குட்டியை ஈன்றது. அந்த குட்டி வழக்கமான ஆட்டு குட்டிப்போல் இல்லாமல் விசித்திரமாக மனித உருவ அமைப்புடன் இருந்தது.
 
மனித உருவம் போல் உடல்வாகும், 2 கைகள், 2 கால்கள் இருந்தது. மேலும் முகம் மனித முகம் போன்றே அமைந்து இருந்தது. குறிப்பாக ஒரு குழந்தையை போன்ற அந்த ஆட்டுக்குட்டியின் விசித்திர தோற்றத்தை கண்டு மூர்த்தி மற்றும் கிராம மக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
 
சில நிமிடங்களில் அந்த குட்டி இறந்து விட்டது. இந்த அதிசய ஆட்டுக்குட்டி பிறந்த  தகவல் அறிந்த சுற்றுப்புற பகுதி  மக்கள் ஏராளமானோர் ஆர்வமாய் வந்து பார்த்து ஆச்சரியமடைந்தனர். இந்த அதிசய   ஆட்டுக்குட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு

சீர்காழி,ஜுலை.17-
 
சீர்காழி ரோட்டரி சங்க புதிய தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா ரத்தினாம்பாள் திருமண அரங்கில் நடந்தது. விழாவிற்கு ரோட்டரி முன்னாள் தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சங்கரன், பழனியப்பன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத்தின் 15-வது தலைவராக சுசீந்திரன் பதவியேற்றுக்கொண்டார்.
 
அதனைத்தொடர்ந்து செயலராக சாமி.செழியன், பொருளாளராக தியாக ராஜன் பொறுப்பேற்றுக் கொண்டனர். மண்டல துணை ஆளுநர் விஸ்வநாதன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பதவி பிரமானம் செய்து வைத்து புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக நடிகர் டெல்லி கணேஷ் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
 
விழாவில் துணைத்தலை வர்களாக சங்கர், செல்வம், பால்சாமி நாடார் கல்வி அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ராமர் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். விழாவில் 12, 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், நகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகளும் வழங்கப்பட்டது.
 
இதில் டாக்டர்முருகேசன், வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன், கணிவண்ணன், ரோட்டரி முன்னாள் தலைவர்கள் பாஸ் கரன், வசந்தக்குமார்பட்டேல், கண்ணன், பிரசாந்த்குமார், விஸ்வலிங்கம், விவேகானந்தா மெட்ரிக்பள்ளி நிர்வாகி ராதாகிருஷ்ணன், பெஸ்ட் மெட்ரிக் பள்ளி நிறுவனர் நடராஜன், தொழில் அதிபர்கள் சர்க்கரை, சுடர் கல்யாணம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், பேரூராட்சி தலைவர் ராம லிங்கம், துணைத் தலைவர் ரவி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி, ஊராட்சி தலைவர் முத்துகுபேரன், மாவட்ட பிரதிநிதி பக்கிரிசாமி, தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் பொன்முடி, வழக்கறிஞர்கள் சுந்தரய்யா, தியாகராஜன், பொறியாளர்கள் சிவகுரு, நாராயணன், ஜேசீஸ் தலைவர் உமாமகேஸ்வரன், நிர்வாகிகள் முரளி, சந்தானம், டெம்பிள் டவுன்ரோட்டரி தலைவர் வைத்தியநாதன் நிர்வாகி பாலமுருகன், சுரேஷ்சந்த், ஹரக்சந்த், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக சுசீந்திரன் ஏற்புரை வழங்கினார். செயலாளர் சாமி செழியன் நன்றி கூறினார்.