நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Thursday, August 23, 2012

ஈவ் டீசிங் செய்தால் கடும் நடவடிக்கை: சீர்காழி டி.எஸ்.பி. எச்சரிக்கை

சீர்காழியில் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சீர்காழி காவல்துறை சார்பில் ராகிங்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புகார் பெட்டிகள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
 
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டி.எஸ்பி பாலகுரு,மகளிர் இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ஜெயந்தி கிருஷ்ணா வரவேற்று பேசினார். இதில் சீர்காழி டி.எஸ்.பி பாலகுரு புகார் பெட்டியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசியதாவது:-
 
இங்கு வைக்கப்படுள்ள புகார் பெட்டியை கல்லூரி மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மாணவிகள் கல்லூரிக்கு வரும்போதோ அல்லது பஸ் நிலையத்திலோ, வீட்டுக்கு அருகாமையிலோ எதாவது அநீதி இழைக்கப்பட்டாலோ அல்லது ஆண்கள் கிண்டல், கேலி செய்து தொந்தரவு செய்தால் இந்த புகார் பெட்டியில் எழுதி போடலாம். புகார் தெரிவிப்பவர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் பெயர், முகவரியை புகாரில் தெரிவிக்கலாம்.
 
தாழ்வு மனப்பான்மையை விட்டு பெண்கள் தைரியமாக பேச முன் வரவேண்டும். இந்திய தண்டனை சட்டத்தில் 511 பிரிவுகள் உள்ளன.எல்லா குற்ற நடவடிக்கைக்கும் தண்டனைகள் உண்டு. ஈவ்டீசிங் செய்பவர்களுக்கு 3முதல் 5 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கடுங்காவல் தண்டனை வழங்க சட்டத்தில் உள்ளது.ஆகையால் ராகிங்,டீசிங் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
இதில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

சீர்காழியில் கட்டி முடிக்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படுமா?

சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் நினைவுகளை போற்றும் வகையில் சீர்காழி தாசில்தார் அலுவலகம் எதிரில் ரூ 1 கோடியே 51 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்ட கடந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனி கவனத்தில் வித்திட்ட இந்த மணிமண்டபத்தை அப்போதைய செய்திதுறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி பல்வேறு வகையான கலை யுக்திகளை கையாண்டார். அதன் தொடர்ச்சியாக மணி மண்டபத்தில் வைப்பதற்காக கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் ஐம்பொன் சிலைகள் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.
 
ஒவ்வொரு சிலையும் 500 கிலோ எடையில் பீடம் உட்பட ஆறேமுக்கால் அடி உயரம் கொண்ட ஜம்பொன் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 21 லட்சம் ஆகும். மேலும் மணிமண்டத்தின் முகப்பில் இருபக்கங்களிலும் பெரியளவிலான இரண்டு கல் யானைகளும் அதன் மேல் பண்ணும், பரதமும், விரலியார் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
ஆரம்ப கால கட்டத்தில் அசுர வேகத்தில் தொடங்கிய மணிமண்டபத்தின் சிற்ப வேலைகள் சற்று தாமதமாகவே நடந்து முடிக்கப்பட்டுள்ளது என தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி காலத்திலேயே மணிமண்டபம் கட்டி திறக்கப்பட வேண்டுமென்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டத்தில் ஓன்றாகும். அதன்படி சீர்காழியில் ஆண்டு தோறும் அரசு சார்பில் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழா கடந்த ஆண்டு புதிய மணிமண்டபத்தில் தலைசிறந்த கலைஞர்களை கொண்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் இந்த மணிமண்டபம் காலதாமதாமாக பணிநிறைவு பெற்றும் திறப்பு விழா காணமுடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களை மனவேதனை அடைய செய்துள்ளது. இது குறித்து தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறுகையில் : உலகெங்கும் தமிழிசையை வளர்த்த முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய தமிழிசை மூவர்களுக்கு மணிமண்டபம் மாளிகை கட்டி திறப்பு விழா செய்யாமல் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.
 
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல்வேறு இன்னல்கள் பட்டு தமிழிசையை வளர்த்த மூவர்களுக்கும் மணிமண்டபம் அவசியமான ஓன்று. அவர்களின் நினைவு களை இந்த மண்டபத்தில் ஆண்டுதோறும் போற்றிப் பாடி உலகலவில் உயர்த்திட நாம் ஓற்றுமையுடன் இணைந்து செயலாற்றிட வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையை புதுப்பித்து சலவை கற்கள் அமைத்து சீரமைக்கவும், கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தை புனரமைக்கவும் பல லட்சம் நிதி ஓதுக்கீடு செய்துள்ளார்.
 
இதேபோல் சீர்காழியில் ரூ 1 கோடியே 51 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

Wednesday, July 25, 2012

சவாரி பிடிப்பதில் தகராறு: ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை

சீர்காழி, ஜுலை. 23-

சீர்காழி அருகே உள்ள இரணியன் நகரில் வசித்தவர் சீனிவாசன் (40). சீர்காழி மாரியம்மன் கோவில் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி ராவ். இருவரும் ஆட்டோ டிரைவர்கள். கொள்ளிடம் முக்கூட்டில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.

சீனிவாசன் ஏற்கனவே நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சீனிவாசனுக்கும், சிவாஜிராவிற்கும் சீர்காழி ரெயில் நிலையத்தில் சவாரி பிடிப்பது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சிவாஜி ராவ், சீனிவாசனை நெஞ்சில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வலியோடு சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். தனது மனைவி கவிதாவிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். வீட்டிற்கு சென்ற சீனிவாசனுக்கு நெஞ்சு வலி அதிகரித்ததை தொடர்ந்து சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சீனிவாசன் மனைவி கவிதா சீர்காழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் - இன்ஸ்பெக்டர்கள் பன்னீர் செல்வம், சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சிவாஜிராவை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சீனிவாசனுக்கு விஷ்வா (9), நிதிஷ்குமார் (7) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

சீர்காழியில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.15 கோடி மோசடி

சீர்காழி,ஜூலை.21-
 
சீர்காழி தென்பாதி வி.என்.எஸ் நகரில் வசித்து வருபவர் நந்தக்குமார் (வயது 55), தேர் வடக்கு வீதியை சேர்ந்தவர் முரளிக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீர்காழியில் கனகதாரா சிட்பண்ட் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி வந்தனர்.
 
இந்தநிலையில் திடீரென அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் சீர்காழி போலீசில் புகார் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
 
கனகதாரா சிட்பண்ட் நிறுவனத்தில் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சேமிப்பு முதலீடு, ஏலச்சீட்டு, ஆகியவற்றில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக ஏலச்சீட்டு முடிந்தவர்களுக்கும், வைப்பு தொகை கொடுத்தவர்களுக்கும் பணம் தராமல் அலைகழிக்கப்பட்டனர்.
 
பணம் கொடுக்குமாறும் பலமுறை கேட்டும் ஏமாற்றமாட்டோம் பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று கூறினர்.தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாங்கள் பணம் கேட்கும் போது எங்களது அசையும், அசையா சொத்துக்களை விற்று அனைவருக்கும் பணம் தந்து விடுவதாக சொல்லி இதுவரை பணம் பட்டுவாடா செய்யவில்லை.
 
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக மேற்படி சீட்டு நடத்தி வந்த இருவரும் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது இரண்டு நாட்களின் வந்து விடுவோம் என்று கூறி பலரிடமும் வாங்கிய பல லட்சம் வழங்காமல் எங்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர்.
 
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதனால் மேற்படி சீட்டு கம்பெனியில் பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இந்த சீட்டு கம்பெனி மோசடியில் வியாபாரிகள், வக்கீல்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் பணம் கட்டி பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ரூ.15 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் சீர்காழியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சீட்டு கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்த சீர்காழி தக்காஸ் பகுதியை சேர்ந்த வரதராஜன் கூறியதாவது:-
 
கடந்த 20 ஆண்டுகளாக இந்த சீட்டு கம்பெனி இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் பணம் கட்டியவர்களுக்கு சரியான முறையில் வட்டி கொடுத்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணம் கட்ட தொடங்கினார்கள். டாக்டர்கள், தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் என முக்கிய பிரமுகர்களும் இங்கு பணம் கட்டி உள்ளனர்.
 
நான் கடந்த 2010 - ம் ஆண்டு முதல் பணம் கட்டி உள்ளேன். ரூ. 1 லட்சத்து 97 ஆயிரம் வரை பணம் கட்டி உள்ளேன். இது குறித்து சீட்டு கம்பெனி உரிமையாளர்களிடம் கேட்ட போது தனியார் கல்லூரியில் முதலீடு செய்துள்ளோம்.தியேட்டர் உள்ளது. பஸ் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறோம்.பணத்தை சரி செய்து விடுவோம் என கூறினார்கள். பணம் கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
சீர்காழி சீட்டு கம்பெனியில் முக்கிய பிரமுகர்கள் ரூ. 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் புகார் கொடுக்க பயப்படுகிறார்கள். வருமான வரித்துரை அதிகாரிகளுக்கு பயந்து அவர்கள் புகார் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

Wednesday, July 18, 2012

ரெட்டிக்கோடங்குடி-காடாக்குடி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: சக்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

வைத்தீஸ்வரன்கோவில் அருகே புங்கனூர் பஞ்சாயத்தில் ரெட்டிக்கோடங்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் அதிகபட்சமாக 15 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏனெனில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
 
இதனால் அருகில் உள்ள கிராமமான காடாக்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியுள்ளதால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. மேலும் 2 கி.மீ தூரத்தில் உள்ள புங்கனூர் பள்ளிக்கு சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே ரெட்டிக்கோடங்குடி - காடாக்குடி இடையே பாப்பான்ஓடை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைத்துக் கொடுத்தால் மாணவர்கள் குறைந்த தூரத்தில் வெகு சீக்கிரமாக பள்ளியை சென்றடைவார்கள்.
 
எனவே ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டுமென சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ. சக்தியிடம் கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த சக்தி எம்.எல்.ஏ. ரெட்டிக்கோடங்குடி - காடாக்குடி இடையே புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்குமாறு யூனியன் பொறியாளரிடம் கேட்டுக் கொண்டார். விரைவில் மாணவர்களின் நலன் கருதி பாலம் கட்டப்படும் என தெரிவித்தார்.
 
மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், ஊராட்சிமன்ற தலைவர் மகேந்திரன், கட்சி நிர்வாகிகள் ராஜு, பாலமுருகன், ஓப்பந்தக்காரர் இளையநாதன் உடனிருந்தனர்.

சாராய வேட்டையின் போது கார் மோதி போலீஸ் ஏட்டு பலி


சீர்காழி அருகே உள்ள பாகசாலை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தவர் ரவிச்சந்திரன் (40). மேலும் நடமாடும் மதுவிலக்கு சிறப்பு தனிப்படையிலும் இருந்து வந்தார்.
கடந்த 6 -ந்தேதி அதிகாலை கூத்தியம் பேட்டையில் சாராயம் கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை சப் -இன்ஸ்பெக்டர் சிங்காரம் தலைமையில் தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
இதில் ஏட்டு ரவிச்சந்திரனும் இடம் பெற்று இருந்தார். அப்போது புத்தூரில் இருந்து பழையாறு நோக்கி வந்த அம்பாசிடர் காரை நிறுத்த முயன்றனர்.
ஆனால் அந்த கார் ஏட்டு ரவிச்சந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
கார் மோதியதில் ரவிச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடல் நிலை மோசமானதை தொடர்ந்து தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்றிரவு 11. 30 மணிக்கு ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மோதி பலியான ஏட்டு ரவிச்சந்திரன் கடந்த 95 -ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். நாகை ஆயுதப்படையில் பணியாற்றினார். பின்னர் பாக சாலை போலீஸ் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார்.
இவர் குடும்பத்துடன் மயிலாடுதுறை அப்துல் காதர் நகரில் வசித்து வந்தார்.
இவரது மனைவி பெயர் எழிலரசி. இவர்களுக்கு தீபிகா என்ற மகளும் ஜெனதீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் ரவிச்சந்திரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மனித உருவில் அதிசய ஆட்டுக்குட்டி

மயிலாடுதுறை பகுதி இளையனூர் ஊராட்சி வடகரை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று நள்ளிரவு குட்டி ஈன்றது. அந்த ஆடு குட்டி போட முடியாமல் அலறியவாறு திணறிக்கொண்டு இருந்தது.
 
இதை பார்த்த கிராம பெண்கள் 3 பேர் வெகு நேரம் போராடி பிரசவம் பார்த்தனர். பின்னர் ஆடு குட்டியை ஈன்றது. அந்த குட்டி வழக்கமான ஆட்டு குட்டிப்போல் இல்லாமல் விசித்திரமாக மனித உருவ அமைப்புடன் இருந்தது.
 
மனித உருவம் போல் உடல்வாகும், 2 கைகள், 2 கால்கள் இருந்தது. மேலும் முகம் மனித முகம் போன்றே அமைந்து இருந்தது. குறிப்பாக ஒரு குழந்தையை போன்ற அந்த ஆட்டுக்குட்டியின் விசித்திர தோற்றத்தை கண்டு மூர்த்தி மற்றும் கிராம மக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
 
சில நிமிடங்களில் அந்த குட்டி இறந்து விட்டது. இந்த அதிசய ஆட்டுக்குட்டி பிறந்த  தகவல் அறிந்த சுற்றுப்புற பகுதி  மக்கள் ஏராளமானோர் ஆர்வமாய் வந்து பார்த்து ஆச்சரியமடைந்தனர். இந்த அதிசய   ஆட்டுக்குட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு

சீர்காழி,ஜுலை.17-
 
சீர்காழி ரோட்டரி சங்க புதிய தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா ரத்தினாம்பாள் திருமண அரங்கில் நடந்தது. விழாவிற்கு ரோட்டரி முன்னாள் தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சங்கரன், பழனியப்பன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத்தின் 15-வது தலைவராக சுசீந்திரன் பதவியேற்றுக்கொண்டார்.
 
அதனைத்தொடர்ந்து செயலராக சாமி.செழியன், பொருளாளராக தியாக ராஜன் பொறுப்பேற்றுக் கொண்டனர். மண்டல துணை ஆளுநர் விஸ்வநாதன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பதவி பிரமானம் செய்து வைத்து புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக நடிகர் டெல்லி கணேஷ் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
 
விழாவில் துணைத்தலை வர்களாக சங்கர், செல்வம், பால்சாமி நாடார் கல்வி அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ராமர் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். விழாவில் 12, 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், நகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகளும் வழங்கப்பட்டது.
 
இதில் டாக்டர்முருகேசன், வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன், கணிவண்ணன், ரோட்டரி முன்னாள் தலைவர்கள் பாஸ் கரன், வசந்தக்குமார்பட்டேல், கண்ணன், பிரசாந்த்குமார், விஸ்வலிங்கம், விவேகானந்தா மெட்ரிக்பள்ளி நிர்வாகி ராதாகிருஷ்ணன், பெஸ்ட் மெட்ரிக் பள்ளி நிறுவனர் நடராஜன், தொழில் அதிபர்கள் சர்க்கரை, சுடர் கல்யாணம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், பேரூராட்சி தலைவர் ராம லிங்கம், துணைத் தலைவர் ரவி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி, ஊராட்சி தலைவர் முத்துகுபேரன், மாவட்ட பிரதிநிதி பக்கிரிசாமி, தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் பொன்முடி, வழக்கறிஞர்கள் சுந்தரய்யா, தியாகராஜன், பொறியாளர்கள் சிவகுரு, நாராயணன், ஜேசீஸ் தலைவர் உமாமகேஸ்வரன், நிர்வாகிகள் முரளி, சந்தானம், டெம்பிள் டவுன்ரோட்டரி தலைவர் வைத்தியநாதன் நிர்வாகி பாலமுருகன், சுரேஷ்சந்த், ஹரக்சந்த், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக சுசீந்திரன் ஏற்புரை வழங்கினார். செயலாளர் சாமி செழியன் நன்றி கூறினார்.

Wednesday, May 23, 2012

பிளஸ் - 2 தேர்வில் மகள் தேர்ச்சி-தந்தை தோல்வி

சீர்காழி, மே. 23-

சிர்காழியை அடுத்துள்ள வேட்டங்குடியை சேர்ந்தவர் மாரிமுத்து. நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சுபஸ்ரீ தேவி. இவர் சீர்காழி சியாமளா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்- 2 படித்தார்.

அதே பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதினார். சுபஸ்ரீ தேவியின் தந்தை மாரிமுத்துவும் தனியாக பிளஸ் - 2 தேர்வு எழுதினார். மயிலாடுதுறை செயின்ட் பால் பள்ளி தேர்வு மையத்தில் இந்த தேர்வு நடைபெற்றது.

நேற்று பிளஸ் - 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதும் சுபஸ்ரீதேவியும், அவரது தந்தை மாரிமுத்துவும் இண்டர் நெட் சென்டருக்கு ரிசல்ட் பார்க்க சென்றனர். இதில் சுபஸ்ரீ தேவி மட்டுமே தேர்ச்சி பெற்று இருந்தார். அவர் 869 மதிப்பெண்கள் பெற்றார்.

அவரது தந்தை மாரிமுத்து தமிழ் பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றார்.அதில் 78 மதிப்பெண் பெற்று இருந்தார். மற்ற பாடங்களில் தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. வருகிற அக்டோபர் மாதம் மீண்டும் தேர்வு எழுத உள்ளதாக மாரிமுத்து தெரிவித்தார்.

சீர்காழி அருகே காண்டிராக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

சீர்காழி, மே.13-
 
சீர்காழி அருகே உள்ள தென்பாவி எம்.கே.கே. நகரில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். காண்டிராக்டர். குடிநீர் வடிகால் வாரிய பணிகளை காண்டிராக்டு எடுத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது காரில் மனைவி வசுமதி, தாய் பாஞ்சாலி, அண்ணன் ராமலிங்கம் ஆகியோருடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.
 
இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 4 பீராவும் திறந்து இருந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி காணப்பட்டது. அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.
 
இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். பட்டப்பகலில் இக்கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. காண்டிராக்டர் கோவிந்த ராஜ் கோவிலுக்கு செல்வதை நோட்டமிட்ட கொள்ளைக் கும்பல் வீட்டின் கதவை உடைத்து கை வரிசையை காட்டி இருக்கிறது. இது குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் சீர்காழி டி.எஸ்.பி. நவநீத கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
 
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இக்கொள்ளை சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Monday, April 16, 2012

மீன்பிடி தடை காலத்தால் வெறிச்சோடிய கடற்கரை: மீன்கள் விலை அதிகரிக்கும் அபாயம்

நாகை, ஏப். 15-    
நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, பூம்புகார், புதுப்பட்டினம், நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தொழிலே முக்கியமானதாக உள்ளது.
எனவே இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று வருகின்றன. மீன்களின் இனப்பெருக்ககால சமயத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை கடலில் மீன் பிடிப்புக்கான தடை காலம் அமல்படுத்தப்படுகிறது.  
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்தது. எனவே படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தப்பட்டன. மீனவர்கள் அனைவரும் வலைகளை பழுது பார்க்கும் பணியினை தொடங்கி உள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை நம்பி மீன் விற்பனையாளர்கள், ஐஸ்கட்டி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
அவர்கள் தடை காலத்தையொட்டி சொந்த ஊருக்கு சென்றனர்.   விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் வஞ்சிரம், சீலா, கடல் விரால், வாவல், தக்காளி இரால், திருக்கை மீன்கள் கிடைக்கும். தற்போது இந்த வகை மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மீன்கள் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் நாட்டுப்படகுகள், நூலிழை படகுகள் மூலமாக மீன்பிடி தொழில் நடைபெறும். இந்த படகுகள் மூலம் குறைந்த அளவு மீன்களே கிடைக்கும். இருப்பினும் அதிகளவில் மீன்களை கொண்டுவரும் விசைப்படகு மீன்பிடி இல்லாததால் ஜூன் 2-ந்தேதி வரை மீன்களின் விலை கடுமையாக உயரும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே மீன்பிடி தடைகால நிவாரணமாக அரசு தலா ரூ.4 ஆயிரம் வழங்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Monday, March 12, 2012

சீர்காழி ஓன்றியத்தில் 15 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை: தி.மு.க. ஒன்றிய செயலாளர் தகவல்




சீர்காழி,மார்ச்.11-
சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஒன்றிய திமுக சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். முன்னாள் ஓன்றியக்குழு தலைவர் விஜயேஸ்வரன், ஓன்றிய துணை செயலாளர்கள் துரைராஜன், சசிக்குமார், முன்னிலை வகித்தனர். ஓன்றிய திமுக இளைஞ ரணி அமைப்பாளர் ராஜேஷ் குமார் வரவேற்றார்.
ஓன்றிய திமுக செயலாளர் மோகனஅன்பழகன் புதிய உறுப்பினர்களுக்கு சேர்க்கை விண்ணப்பத்தை வழங்கி பேசுகையில் : சீர்காழி ஓன்றிய அளவில் 15 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இதில் இளைஞர்கள், மகளிர் அதிகளவில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி வரை திவீர உறுப்பினர் சேர்க்கை ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறும் என்றார்.
இதில் மாவட்ட பிரதிநிதி அன்பழகன், கவுன்சிலர் முருகன், முன்னாள் கவுன்சிலர் சிகேபாண்டியன் உள்ளிட்ட பலர் கலநது கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி முத்துமகேந்திரன் நன்றி கூறினார்.

சீர்காழியில் மகளுடன் பிளஸ்-2 தேர்வு எழுதிய சாலைப்பணியாளர்: படிப்பை யாரும் பாதியில் விடவேண்டாம்

சீர்காழி, மார்ச். 8-
 
படிப்பதற்கு வயது ஓரு தடை இல்லை, ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் என்று சீர்காழியை சேர்ந்த சாலை பணியாளர் ஓருவர் நிரூபித்துள்ளார். இன்று அவர் தனது மகளுடன் பிளஸ்-2 தேர்வை எழுதினார். அதுபற்றிய விவரம் வருமாறு:-  
 
நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வேட்டங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). இவர் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் சுபஸ்ரீ தேவி (17), சீர்காழி சியாமளா பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாரிமுத்து சிறுவயதில் இருந்தே படிப்பில் உரிய கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
 
அதன் பிறகு ஆண்டுகள் செல்ல, செல்ல அவருக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இந்த வயதில் படித்தால் ஏளனமாக பார்ப்பார்களே என்று சிறிதும் கவலைபடாமல் ஆர்வத்துடன் இருந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு பிளஸ்-2 தனித் தேர்வராக பங்கேற்க படித்து வந்தார். வரலாறு பாடப் பிரிவை எடுத்து ஆர்வமாக தினமும் கடினமாக உழைத்தார்.
 
மேலும் மகள் சுபஸ்ரீ தேவி, பிளஸ்- 2 பாடங்களை தனது தந்தை மாரிமுத்துவுக்கு மாலை நேரங்களில் சொல்லி கொடுத்து வந்தார். தேர்வு நாள் நெருங்க நெருங்க மகளுடன் சேர்ந்து மாரிமுத்துவும் ஆர்வத்துடன் பாடங்களை படித்தார்.  
 
இன்று பிளஸ்-2 அரசு பொதுதேர்வு தொடங்கியது. இதனால் தேர்வை எழுத மகளுடன் மாரிமுத்து இன்று காலை புறப்பட்டார். வழியில் சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு தேர்வை எழுத சென்றனர். மகள் சுபஸ்ரீதேவி சீர்காழி பள்ளியிலும், மாரிமுத்து மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பள்ளியிலும் இன்று பிளஸ்-2 தேர்வை எழுதினர். இதுபற்றி மாரிமுத்து கூறியதாவது:-  
 
படிப்பதற்கு வயது தடை கிடையாது. படிப்பை யாரும் பாதியில் விட்டு விட வேண்டாம். இன்றைய இளைஞர்கள் படித்தால் தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையமுடியும். நான் பதவி உயர்வுக்கோ, சம்பள உயர்வுக்கோ படிக்கவில்லை. கல்வி செல்வம் மட்டுமே வாழ்க்கையில் உண்மையான சொத்து ஆகும் என்றார். கடந்த 2010-ம் ஆண்டில் மகளுடன் மாரிமுத்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, March 5, 2012

சீர்காழி அருகே மாணவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட தொழிலாளி: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்


சீர்காழி, மார்ச்.3-
 
நாகை மாவட்டம் சீர்காழி திட்டை ரோட்டில் உள்ள நங்கநள தெருவை சேர்ந்தவர் ராஜீ. இவரது மகள் ராதிகா(வயது12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ராதிகா வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அதன் பின்னர் பள்ளி முடிந்து மாலை 5.30 மணி வரை வீடுதிரும்பவில்லை.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் அமுதா மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இந்நிலையில் வீட்டின் பின் பக்கத்தில் உள்ள நார்த்தங்காய் மரக்கொல்லையில், சுடிதார் துப்பட்டாவால் தூக்கில் மாணவி ராதிகா பிணமாக தொங்கினார். இதை கண்ட சிலர் ராதிகாவின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர்.
 
அவர் அலறி அடித்து ஓடி சென்று பிணமாக தொங்கிய மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுபற்றி தகவல் கிடைத்ததும், நாகை போலீஸ் ஏடிஎஸ்.பி. மணிவண்ணன், சீர்காழி டி.எஸ்.பி. நவநீத கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுகுணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், தேவபாலன், ராஜேந்திரன் ஆகியோர் மாணவி ராதிகா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் ராதிகாவை அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது.   சீர்காழி நேரு காலனியை சேர்ந்தவர் அஜீத்குமார்(17). கட்டிட தொழிலாளி. இவர் மாணவி ராதிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக மாணவி ராதிகா வந்துள்ளார்.
 
இதை நோட்டமிட்டு அஜீத்குமாரும், அவரது நண்பர் சென்னையை சேர்ந்த விஜயும், பின் தொடர்ந்து சென்றுள்ளனர். வீட்டின் பின்புறம் உள்ள நார்த்தங்காய் மரகொல்லைக்கு காய்களை பறிக்க ராதிகா சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அஜீத்குமார், ராதிகாவை பார்த்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கு ராதிகா மறுப்பு தெரிவித்து அஜித்குமாரை கண்டித்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் உடனே ராதிகா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினார். பின்னர் ராதிகாவை, விஜய் பிடித்து கொள்ள அஜித்குமார் துப்பட்டாவால் மரத்தில் கட்டி ராதிகாவை தூக்கில் தொங்க விட்டார். இதில் சிறிது நேரத்தில் ராதிகா துடிதுடித்து இறந்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
மாணவியை கொன்ற அஜித்குமார், விஜய் ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்கள் 2 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்க மறுத்த மாணவியை நண்பனுடன் சேர்ந்து வாலிபர் கொன்ற சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே பயங்கரம்- மனைவியை வெட்டி கொன்ற கணவன்: நடத்தையில் சந்தேகத்தால் ஆத்திரம்

சீர்காழி, மார்ச். 4-
சீர்காழி அருகே நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை வெட்டி கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.   நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தாண்டவன்குளம் புதுநகரை சேர்ந்தவர் பாண்டியன். (வயது 50). அவரது மனைவி வெள்ளையம்மாள். (45). இவருக்கு ஏற்கனவே செல்லையன் என்பவருடன் திருமணம் நடந்து உள்ளது.
 
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து பாண்டியனை திருமணம் செய்தார். கடந்த சில நாட்களாக பாண்டியன் தனது மனைவி வெள்ளையம்மாள் நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். நேற்று கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர்.
 
நள்ளிரவு சமயம் வெள்ளையம்மாள் திடீர் என மாயமானார். அப்போது பாண்டியன் கண் விழித்து பார்த்த போது மனைவி மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே எழுந்து தேட ஆரம்பித்தார்.   அப்போது வெள்ளையம்மாள் அங்கு உள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டு இருந்தார். கோபத்தின் உச்சிக்கு சென்ற பாண்டியன் அரிவாளால் சரமாரியாக வெள்ளையம்மாளை வெட்டினார்.
 
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். அதனை பார்த்ததும் பாண்டியன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று காலை வெள்ளையம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாண்டியனை போலீசார் கைது செய்தனர்

Monday, February 27, 2012

சீர்காழி அருகே ரெயிலில் அடிபட்டு புதுமாப்பிள்ளை பலி

சீர்காழி, பிப். 21-
 
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சரகம் குமாரநத்தம் மேல தெருவை சேர்ந்தவர் கணபதி. அவரது மகன் கருணாகரன். (வயது 27). இவருக்கும் ரேவதி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.
 
இன்று காலை கருணாகரன் மருவத்தூர் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் கருணாகரன் மீது மோதியது.இதில் அவர் உடல் துண்டாகி பலியானார்.
 
இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். கருணாகரன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தாரா? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் அனல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டி மீனவ கிராம மக்கள் போராட்டம்- சீர்காழி அருகே பரபரப்பு

சீர்காழி, பிப். 22-
தனியார் அனல் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் பகுதியில் தனியார் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
 
மேலும் இதற்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளும் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் அனல் மின்நிலையம் அமைத்தால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
 
இதற்கிடையே கடந்த வாரம் நாகை கலெக்டர் முனுசாமி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.கூட்டத்திலும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் பெருந்தோட்டம் அருகேயுள்ள சாவடி குப்பம் மீனவ கிராமத்தில், 300-க்கும் மேற்பட்ட வீடுகளில், அனல் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
 
மேலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீனவ கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை அருகே பரிதாபம்: மனைவியை மிரட்ட முயன்ற கணவர் தீயில் கருகி சாவு

நாகை, பிப். 27-
நாகை அருகே மனைவியை மிரட்ட முயன்ற கணவர் தீயில் கருகி இறந்தார்.   நாகை அருகே உள்ள வள்ளிவலம் போலீஸ் சரகம் கொட்டன் குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சந்திரா. 2-வது மனைவி இந்திரா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஜெயபால் தனது மனைவியிடம் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு நச்சரித்து வந்தார்.
 
நேற்றும் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். ஆனால் சந்திரா பணம் கொடுக்கவில்லை. ஆத்திரம் அடைந்த ஜெயபால் தனது மனைவியை மிரட்டுவதற்கு உடலில் தீ வைத்தார். இதில் உடல் கருகிய அவர் வேதனையால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
 
உடல் கருகிய ஜெயபாலை தூக்கி கொண்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.   இதுகுறித்து வள்ளிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Wednesday, February 15, 2012

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று கடைகள் அடைப்பு: மின்வெட்டை கண்டித்து போராட்டம்

சீர்காழி, பிப். 15-

சீர்காழி அருகே உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இங்கு புகழ் பெற்ற சிவன் கோவிலான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலில் உள்ளே செவ்வாய் தோஷ பரிகார தலமும் உள்ளது. இதனால் இங்கு வெளியூர்களில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இந்த பகுதியில் தினமும் சுமார் 10 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாக இந்த பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந் நிலையில் மின்வெட்டை கண்டித்து இன்று வைத்தீஸ்வரன் கோவிலில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனால் வைத்தீஸ்வரன் கோவில் வடக்கு, மேல ரதவீதி, கடைவீதி, பட்டவர்த்தி ரோடு பகுதிகளில் உள்ள சுமார் 150 கடைகள் மூடப்பட்டு இருந்தன. சில கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

இந்த கடை அடைப்பால் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானர்கள். மேலும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாக இந்த பகுதி வியாபாரிகளின் குற்றம் சாட்டி உள்ளனர்.

விவசாயிகளின் நெல் மூட்டைக்கு கொள்முதலில் முக்கியத்துவம் தராமல் வியாபாரிகளின் நெல் மூட்டைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொள்முதல் செய்யப்படுவதாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினர். எனவே இந்த குறையை களைய கோரியும் நெல் மூட்டைக்கு கூடுதலாக ரூ.20 வழங்க வற்புறுத்தியும் இந்த கடை அடைப்பு நடந்தது.

சீர்காழி அருகே வாடகை ஜெனரேட்டர் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர்

சீர்காழி அருகே வாடகை ஜெனரேட்டர் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர்
சீர்காழி, பிப்.14-
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் புகழ் பெற்ற கோயில் ஸ்தலமாகும். இவ்வூரில் சுமார் 6 ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். 15 வார்டுகளை உள்ளடக்கிய வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் சுமார் 10 வார்டுகளின் பொது மக்களுக்கு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் 600 வீடுகளுக்கு நேரடி குடிநீர் இணைப்பும், 300க்கும் மேற்பட்ட பொது குடிநீர் மையங்களின் மூலமாகவும் நாள்தோறும் காலை, மாலை என் இருவேலைகளிலும் பொதுமக்களுக்கு ஏற்ற நேரத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வரும் மின்வெட்டால் இப்பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி 10மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப் படுவதால் பொதுமக்களின் அன்றாட தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், சரியான குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல இயலாதநிலை உருவாகியது. இந்த சூழ்நிலை வைத்தீஸ்வரன்கோயில் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமையில், துணை தலைவர் போகர்ரவி முன்னிலையில் அவசர ஆலோசனை செய்து வாடகை ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடிவு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி ரெயில்வே ரோட்டில் அமைந்துள்ள பூங்காவில் அதிகதிறன் கொண்ட ஜெனரேட்டர் மூலம் நீரேற்றத்தை தொடங்கி வைத்தனர். இதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழக்கம் போல் விநியோக்கப்படும் என தலைவர் ராமலிங்கம், துணை தலைவர் போகர்ரவி தெரிவித்தனர். நகர துணை செயலாளர் சுகுமார், கவுன்சிலர்கள் தேவா, ரவி மற்றும் பலர் உடனிருந்தனர்.

நாகை அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபர்

நாகை, பிப் 12-
 
நாகை அருகே உள்ள திட்டசேரியை சேர்ந்தவர் முருகையன். அவரது மகள் மாதவி(வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பிரபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதல் வயப்பட்டனர்.காதல் வானில் சிறகடித்து பறந்த அவர்கள் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தனர்.
 
இதனால் மாதவி 3 மாதம் கர்ப்பம் ஆனார். அதிர்ச்சி அடைந்த அவர் தனது காதலனிடம் திருமணம் செய்யுமாறு கூறினார். ஆனால் பிரபு மறுத்து விட்டார்.   பதறி போன மாதவி இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
 
புகார் மனுவில் என்னை காதலித்து கர்ப்பமாக்கிய பிரபு, உடந்தையாக இருந்த அவரது தாய் தேவிகா, அக்காள் பிரவீணா ஆகியோர் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

சீர்காழியில் கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி: பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

சீர்காழி,பிப்.8-
சீர்காழியில் கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.   சீர்காழி அருகேயுள்ள தாடாளன் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்(வயது25).இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் வினோத் சம்பவத்தன்று சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார்.அப்போது அங்கு இட்லி கடை நடத்தி வரும் சம்பந்தம்(30) என்பவரது கடைக்கு சென்றார்.   திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு சம்பந்தத்தை,வினோத் மிரட்ட தொடங்கினார். இதனால் அதிர்ச்சிடைந்த சம்பந்தம் சத்தம் போட தொடங்கினார். உடனே அருகில் நின்ற பொது மக்கள் ரவுடி வினோத்தை விரட்டி சென்று பிடித்தனர்.
பின்னர் அவரை சீர்காழி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து , பிடிபட்ட வினோத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பனார்கோவிலில் தோழி தாக்கியதில் பிளஸ்-1 மாணவி காயம்: போலீசார் விசாரணை

தரங்கம்பாடி,பிப்.7-
செம்பனார்கோவிலில் தோழி தாக்கியதில் காயமடைந்த பிளஸ்-2 மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.   நாகை மாவட்டம் செம்பனார் கோவிலை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகள் மூகாம்பிகை (வயது15).
 
இவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே வகுப்பில் படிப்பவர் நிவேதிதா. இருவரும் தோழிகள். கணக்கு பாடத்தில் மூகாம்பிகை குறைவான மார்க் எடுத்ததால் நிவேதிதா அவரை தலையில் குட்டி உள்ளார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. விளையாட்டாக ஆரம்பித்த சண்டை கைகலப்பாக மாறியது.
 
இதில் மூகாம்பிக்கை கழுத்தில் காயம் ஏற்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்ற மூகாம்பிகை அதன் பிறகு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.
 
இந்த சம்பவம் பற்றி மூகாம்பிகை தந்தை வெற்றி வேல் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து நிவேதிதாவிடம் விசாரணை நடத்தினார்கள்

வேளாங்கண்ணியில் பயங்கரம்- இளம் பெண்ணை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: கணவர் உள்பட 3 பேர் கைது

நாகை, பிப். 6-
வேளாங்கண்ணியில் இளம்பெண்ணை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற கணவர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.   நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகம் செம்பியன் மகாதேவி மெயின் ரோட்டை சேர்ந்தவர் இளையராஜா. (வயது 32). அவரது மனைவி சித்ரா. (26). இவர்கள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
 
நேற்று இரவு சித்ரா வீட்டில் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உயிருக்கு போராடிய சித்ராவை தூக்கி கொண்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்டுகிறது.
 
 இதுகுறித்து சித்ரா நாகை மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி கோதண்டராமனின் மரண வாக்கு மூலம் கொடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-
 
என்னை எனது மாமியார் பார்வதி, மாமனார் சின்னத்தம்பி, கணவர் இளையராஜா ஆகியோர் எனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தனர். இதற்கு உடந்தையாக கணவரின் தம்பி கார்த்திக்கேயன், அவரது மனைவி அனிதா ஆகியோர் இருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  
 
வேளாங்கண்ணி போலீசார் 5 பேர் வழக்கு பதிவு செய்தனர். இதில் இளையராஜா, அனிதா, சின்னதம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Sunday, February 5, 2012

சீர்காழி அருகே லாரி மீது மோதல்: போலீஸ்காரர் பலி

சீர்காழி, பிப். 4-

திருவாரூர் அருகே உள்ள திருமருகல் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். (வயது 50). திருவாரூர் போலீஸ் கட்டுப்பாடு அறையில் போலீஸ்காரராக பணியாற்று வந்தார். அவரது மனைவி விஜயராணி. இவர்களது மகன் திவாகர். நாகையில் போலீஸ்காரராக உள்ளார்.

நேற்று காலை தனது மகன்ங திவாகருக்கு புது மோட்டார் சைக்கிள் வாங்கு புதுச்சேரி சென்றார். அங்கு பைக் வாங்கி விட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். சீர்காழி அருகே கோவில் பத்து என்ற இடத்தில் சென்ற போது சாலை ஓரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் கல்யாணசுந்தரத்துக்கு தலையில் அடிபட்டது. அவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை, பிப். 5-
 
நாகையில் கடற் சீற்றத்தால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.   நாகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகம் காணப்படுகிறது.
 
காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் கடலில் எழும்பும் ராட்சத அலைகள் கரையை முட்டி மோதுகின்றன. தொடர்ந்து காற்று வேகமாக வீசியதால் இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.  
 
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது காற்றின் வேகம் நேரம் ஆக ஆக அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் எங்களால் மீன்பிடிக்க முடியவில்லை என்றனர்.

Thursday, February 2, 2012

தமிழர்களின் உரிமைகள் ம.தி.மு.க.வினால் மீட்கப்படும்: நாஞ்சில் சம்பத் பேச்சு

குத்தாலம், பிப்.2-
குத்தாலம் அருகே பழையகூடலூரில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு நாகை மாவட்ட செயலாளர் குத்தாலம் ஏ.எஸ். மோகன் தலைமை தாங்கினார். குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்கு ஒன்றியச் செயலாளர் வாசு வரவேற்று பேசினார்.
ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மொழி இந்தி, இறை மொழி சமஸ்கிருதம், இசை மொழி கன்னடம், தெலுங்கு என்று உருவாக்கப்பட்டு தொண்மையான தமிழ் மொழியின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன.
தமிழர்களின் நிலப்பரப்பான திருப்பதி, காளகஸ்தி, திருவனந்தபுரம், தேவிக்குளம், பீர்மேடு என்று பல்வேறு பகுதிகள் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டன. இதனால் தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இதனை மீட்க வேண்டும். தமிழ் மொழியின் மீட்சிக்கு மட்டுமல்லாமல் தமிழர்களின் நிலத்தையும் மீட்க விரைவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் போராட்டம் நடத்த உள்ளார். கண்டிப்பாக தமிழர்களின் உரிமைகள் ம.தி.மு.க.வினால் மீட்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கட்சி துணை பொதுச் செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் கல்வெட்டை திறந்து வைத்தார். விழாவில் மாநில கொள்ளை விளக்க அணி துணை செயலாளர் என்.எஸ். அழகிரி, முன்னாள் ஒன்றிய பெருந் தலைவர் தங்கையன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோமல் கிட்டு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கிளை நிர்வாகிகள் சின்ன துரை, குமரவேல், கோவிந்தராஜ், சாமிநாதன், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஊராட்சி செயலாளர் கிருபானந்தம் நன்றி கூறினார்.இதேபோல் மயிலாடுதுறையில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்திற்கு சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நகர, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மார்க் கெட் கணேசன் வரவேற்று பேசினார். அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பி னர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் இல்லை: நகரசபை கூட்டத்தில் புகார்

சீர்காழி,பிப்.1-

சீர்காழி நகராட்சியின் சாதாரணக் கூட்டம் தலைவர் இறைஎழில் தலைமையில் மன்ற் கூடத்தில் நடந்தது. ஆணையர் ஸ்ரீதரன், துணை தலைவர் தமிழ் செல்வம், மேலாளர் சிவசங்கரன், நகரமைப்பு ஆய்வர் கல்யாணரங்கன் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். எழுத்தர் ஆனந்தராஜ் தீர்மானங்களை படித்தார்.

சுப்புராயன் : நகராட்சியில் அனுமதி பெறாமல் விற்பனை செய்யப்பட்ட மனை பிரிவுகளில் பலர் வீடுகள் கட்டியுள்ளனர். இதற்கு நகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலமுருகன் : 4வது வார்டு ஈசானியத் தெருவில் 8 வார்டுகளின் சாக்கடை நீர் சங்கமிப்பதால் அதிகளவில் கொசு தொல்லை ஏற்பட்டுள்ளது. புதிய நகர் பகுதிகளில் சாக்கடை நீர் செல்லும் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அடைக்கப்படடுள்ளது. இதனை ஆய்வு செய்து சாக்கடை நீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிவாயு தகன மேடை பணி எந்த நிலையில் உள்ளது.

முகமது நஜீர் : சீர்காழி அருகே விளந்திட சமுத்திரத்தில் நகராட்சி அனுமதி பெறாமல் திருமண மண்டபம் கட்டப் பட்டு வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. அதிகாரிகள் தெளிவான பதிலையும், நடவடிக்கை எடுக்கப்படாததற்கு காரணத்தையும் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

வேல்முருகன் : சீர்காழி அரசு தலைமை மருத்து வமனை வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் பல்வேறு தவறுகள் நடைபெறுகிறது. அவசரத் தேவைக்கு குடிநீர் இல்லை உடன் சரிசெய்ய வேண்டும். நகரில் வாடிக்கையாளர்களுக்கு முறையாக சிலிண்டர்கள் வழங்கப்படுதில்லை. காலதாமத்தை சரிசெய்து உடன் சிலிண்டர்கள் வழங்க வேண்டும்.

சாந்திசரவணன்: ரயிலடி தெருவில் 4 வார்டுகளின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஈமச்சடங்கு மண்டபம் அமைத்திட வேண்டும்.

விஜயக்குமார் : 2வது வார்டில் எம்.எஸ்.கே, ஸ்ரீநகர்களில் மின் கம்பங்கள் அமைப்பதற்கு மின்வாரியத்திடம் உரிய பணம் செலுத்தியும் மின் கம்பங்கள் நடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

திருச்செல்வன்: திட்டை ரோட்டில் ஏற்கனவே இருந்த இரண்டு அடிப்பம்புகளை அமைத்து தர கோரி பலமுறை மன்றத்தில் தெரிவித்தும் நடைபெறவில்லை. மன்றத்தில் குறைகளை பேசுவதை ஏற்றுக் கொண்டு செய்யமாடீர்களா? ஓவ்வொன்றுக்கும் தனித்தனியாக மனு கொடுத்தால் தான் செய்வீர்களா?

மாரிமுத்து : சிங்கார தோப்பு தெருவில் மின் கம்பங்கள் அமைத்து அப்பகுதியில் இருளை போக்க வேண்டும். கீழ்த்தெருவில் தார் சாலை அமைக்க டெண்டர்விட்டு ஒரு வருடமாகியும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை. உடன் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவப்பிரியா சீர்காழியில் உள்ள பள்ளிகளில் கழிப்பிடங்கள் சுகாதாமற்ற நிலையில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சியின் சுகாதார பரிவினர் நகரில் உள்ள பள்ளிகளில் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப் படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

அம்பிகா பக்கிரிசாமி : 8வது வார்டு வாய்க்காங்கரை தெருவில் கழிவுநீர்கள் வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும்.

ராஜேஷ்: புழுகாப்பேட்டை பிள்ளையார் கோயில் அருகே வேகத்தை அமைக்க வேண்டும். எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய நகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்தும் பலன் இல்லை. புகார் செய்த ஓரிரு நாட்களிலியே சரி செய்தால் தான் நகராட்சிக்கும் நகர்மன்ற உறுப்பினர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

தலைவர் இறைஎழில் : அரசு வழங்கும் அனைத்து நலதிட்டங்களும், நிவாரணங்களும் நகரில் உள்ள 24 வார்டுகளுக்கும் முறையாக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்ணெண்னை பற்றாக்குறையை போக்க அரசு துரிதநவடிக்கை எடுக்க மன்றத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Thursday, January 26, 2012

சீர்காழி அருகே வாய்பேச முடியாத பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்கள்

சீர்காழி, ஜன. 17-
 
சீர்காழி அருகே உள்ள திருக்கருக்காவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராதிகா (வயது 26, பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாய் பேச முடியாதவர். நேற்று மாலை அப்பகுதியில் உள்ள காட்டில் விறகு பொறுக்க ரேணுகா சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் வினோத் (26), பாலாஜி (27). வடகால் செந்தில் (25). ஆகிய 3 பேரும் மது குடித்து கொண்டு இருந்தனர்.  
 
போதை தலைக்கேறிய அந்த வாலிபர்கள் விறகு பொறுக்கி கொண்டு இருந்த ராதிகாவிடம் சென்று தகராறு செய்தனர். பின்னர் அவரை பலவந்தமாக கையை பிடித்து இழுத்தனர். அவர்களின் பிடியில் இருந்து ராதிகா தப்ப முயன்றார். ஆனால் அந்த 3 வாலிபர்களும் ராதிகாவை குண்டுகட்டாக தூக்கி, மறைவான இடத்துக்கு சென்று கற்பழிக்க முயன்றனர்.
 
வாய்பேச முடியாத பெண் என்பதால், ராதிகா சத்தம் போட முடியாமல் அந்த வாலிபர்களை கைகளால் தாக்கினார். அப்போது அந்த வழியாக சிலர் இதை பார்த்து ஓடிவந்தனர் அதற்குள் அந்த போதை வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
தலையில் பலத்த காய மடைந்த ரேணுகாவை சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ராதிகாவின் தாய் பானுமதி சீர்காழி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கற்பழிக்க முயன்ற 3 வாலிபர்களையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தரங்கம்பாடி அருகே குதிரை-மாட்டு வண்டி பந்தையம்

தரங்கம்பாடி, ஜன. 18-
 
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஆண்டு தோறும் தில்லையாடி உத்திராபதி யார் 37-ம் ஆண்டு மற்றும் நாராயணசாமியின் நினைவாக குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தையம் நடைபெற்றது. திருக்கடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் எழில்நம்பி தலைமையில், முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் பெருமாள் விழாவை துவக்கிவைத்தார்.
 
மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் சிம்சன் வரவேற்றார். அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அமிர்த விஜயகுமார், கமலாசங்கர், கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மாட்டு வண்டி போட்டியை பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சிறிய மாடு, நடு மாடு, பெரியமாடு என நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும், 30-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன.
 
இந்த போட்டியை காண உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் திரண்டனர். திருக்கடையூரிலிருந்து தரங்கம்பாடி வரை சாலையின் இருபுறமும் மக்கள் குவிந்திருந்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் ரெத்தினசாமி, சீர்காழி டி.எஸ்.பி. நவநீத கிருஷ்ணன், தரங்கை தாசில்தார் சூரிய மூர்த்தி, பொரையார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகர், தரங்கை பேரூராட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் சுந்தரவடிவேலு, அண்ணாதுரை, நடராஜன், கோவிந்தசாமி செல்வராணி பொன்னுக்குட்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
போட்டியில் வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு எம்.எல்.ஏ. பவுன்ராஜ், மயிலாடுதுறை எம்.பி. ஓ.எஸ்.மணியன், மாவட்ட கவுன்சிலர் ஞானவேலன், கோகுலபிரசாத், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் நிவேதாமுருகன், திருக்கடையூர் ஒன்றிய கவுன்சிலர் எஸ். மாறன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முடிவில் இவ்விழா நிர்வாகி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Sunday, January 8, 2012

சீர்காழியை தாக்கிய தானே புயலின் கோர தண்டவ காட்சிகள்








சீர்காழி அருகே பரபரப்பு: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி; மற்றொரு மாணவரை தேடும் பணி தீவிரம்

சீர்காழி, ஜன. 4-
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் பாலு மகன் செல்வகணபதி (வயது 19). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் பி.சி.ஏ. படித்து வருகிறார். சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதவன் மகன் வினோத்குமார் (19). இவர் கடலூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.ஈ. படித்து வருகிறார். மேலும் அவர்களது நண்பர்கள் விக்னேஷ் (27), அருண் (22), சந்தோஷ்குமார் (22). இவர்கள் கடலூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.ஈ. படித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் நேற்று மாலை 5 பேரும் நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் ரெயில்வே தண்டவாளத்தின் கீழ் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது செல்வகணபதி, வினோத்குமார் ஆகியோரை ஆற்றுநீர் இழுத்து சென்றது.
 
இதை பார்த்த மற்ற நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது. உடன் சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்தனர் எனினும் செல்வகணபதி, வினோத்குமார் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
 
இதுபற்றி கொள்ளிடம் போலீஸ் நிலையம், சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இனஸ்பெக்டர் செல்வி, தீயணைப்பு நிலைய அலுவலர் மருதப்பன் தலைமையில் குழுவினர் ரப்பர் படகு மூலம் விடிய, விடிய தேடினர். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை.
 
கொள்ளிடம் பகுதியில் புயல் சேதங்களை ஆய்வு செய்து கொண்டிருந்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், கலெக்டர் முனுசாமி, எம்.எல்.ஏ. சக்தி ஆகியோரும் கொள்ளிடம் ஆற்றில் கல்லூரி மாணவர்கள் முழ்கிய தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்றனர்.
 
பின்னர் தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் மாணவர்களை தேட உத்தரவிட்டனர். மேலும் தண்ணீரில் மூழ்கிய மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினர்.இன்று காலை 9 மணிய ளவில் அருகில் உள்ள சேற்றில் என்ஜினீயரிங் மாணவர் வினோத்குமார் உடல் சிக்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மற்றொரு மாணவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

சீர்காழி அருகே மாமியார் கண்டித்ததால் மருமகள் தற்கொலை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வழுதலைகுடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். பி.எஸ்.என்.எல். ஊழியர். அவரது மனைவி விஜயராணி. (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 3 மகன்கள் உள்ளனர். நேற்று விஜயராணியை மாமியார் கண்டித்தார். இதனார் மனமுடைந்த விஜயராணி தற்கொலை செய்வது என தீர்மானித்தார்.
 
அதன்படி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஜயராணி தனது உடலில் மண்எண்ணை எடுத்து ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய அவர் வேதனையால் அலறி துடித்தார்.
 
சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடல் கருகிய விஜயராணியை தூக்கி கொண்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.  
 
இதுகுறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.