நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Monday, March 12, 2012

சீர்காழி ஓன்றியத்தில் 15 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை: தி.மு.க. ஒன்றிய செயலாளர் தகவல்




சீர்காழி,மார்ச்.11-
சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஒன்றிய திமுக சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். முன்னாள் ஓன்றியக்குழு தலைவர் விஜயேஸ்வரன், ஓன்றிய துணை செயலாளர்கள் துரைராஜன், சசிக்குமார், முன்னிலை வகித்தனர். ஓன்றிய திமுக இளைஞ ரணி அமைப்பாளர் ராஜேஷ் குமார் வரவேற்றார்.
ஓன்றிய திமுக செயலாளர் மோகனஅன்பழகன் புதிய உறுப்பினர்களுக்கு சேர்க்கை விண்ணப்பத்தை வழங்கி பேசுகையில் : சீர்காழி ஓன்றிய அளவில் 15 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இதில் இளைஞர்கள், மகளிர் அதிகளவில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி வரை திவீர உறுப்பினர் சேர்க்கை ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறும் என்றார்.
இதில் மாவட்ட பிரதிநிதி அன்பழகன், கவுன்சிலர் முருகன், முன்னாள் கவுன்சிலர் சிகேபாண்டியன் உள்ளிட்ட பலர் கலநது கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி முத்துமகேந்திரன் நன்றி கூறினார்.

சீர்காழியில் மகளுடன் பிளஸ்-2 தேர்வு எழுதிய சாலைப்பணியாளர்: படிப்பை யாரும் பாதியில் விடவேண்டாம்

சீர்காழி, மார்ச். 8-
 
படிப்பதற்கு வயது ஓரு தடை இல்லை, ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் என்று சீர்காழியை சேர்ந்த சாலை பணியாளர் ஓருவர் நிரூபித்துள்ளார். இன்று அவர் தனது மகளுடன் பிளஸ்-2 தேர்வை எழுதினார். அதுபற்றிய விவரம் வருமாறு:-  
 
நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வேட்டங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). இவர் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் சுபஸ்ரீ தேவி (17), சீர்காழி சியாமளா பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாரிமுத்து சிறுவயதில் இருந்தே படிப்பில் உரிய கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
 
அதன் பிறகு ஆண்டுகள் செல்ல, செல்ல அவருக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இந்த வயதில் படித்தால் ஏளனமாக பார்ப்பார்களே என்று சிறிதும் கவலைபடாமல் ஆர்வத்துடன் இருந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு பிளஸ்-2 தனித் தேர்வராக பங்கேற்க படித்து வந்தார். வரலாறு பாடப் பிரிவை எடுத்து ஆர்வமாக தினமும் கடினமாக உழைத்தார்.
 
மேலும் மகள் சுபஸ்ரீ தேவி, பிளஸ்- 2 பாடங்களை தனது தந்தை மாரிமுத்துவுக்கு மாலை நேரங்களில் சொல்லி கொடுத்து வந்தார். தேர்வு நாள் நெருங்க நெருங்க மகளுடன் சேர்ந்து மாரிமுத்துவும் ஆர்வத்துடன் பாடங்களை படித்தார்.  
 
இன்று பிளஸ்-2 அரசு பொதுதேர்வு தொடங்கியது. இதனால் தேர்வை எழுத மகளுடன் மாரிமுத்து இன்று காலை புறப்பட்டார். வழியில் சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு தேர்வை எழுத சென்றனர். மகள் சுபஸ்ரீதேவி சீர்காழி பள்ளியிலும், மாரிமுத்து மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பள்ளியிலும் இன்று பிளஸ்-2 தேர்வை எழுதினர். இதுபற்றி மாரிமுத்து கூறியதாவது:-  
 
படிப்பதற்கு வயது தடை கிடையாது. படிப்பை யாரும் பாதியில் விட்டு விட வேண்டாம். இன்றைய இளைஞர்கள் படித்தால் தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையமுடியும். நான் பதவி உயர்வுக்கோ, சம்பள உயர்வுக்கோ படிக்கவில்லை. கல்வி செல்வம் மட்டுமே வாழ்க்கையில் உண்மையான சொத்து ஆகும் என்றார். கடந்த 2010-ம் ஆண்டில் மகளுடன் மாரிமுத்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, March 5, 2012

சீர்காழி அருகே மாணவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட தொழிலாளி: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்


சீர்காழி, மார்ச்.3-
 
நாகை மாவட்டம் சீர்காழி திட்டை ரோட்டில் உள்ள நங்கநள தெருவை சேர்ந்தவர் ராஜீ. இவரது மகள் ராதிகா(வயது12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ராதிகா வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அதன் பின்னர் பள்ளி முடிந்து மாலை 5.30 மணி வரை வீடுதிரும்பவில்லை.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் அமுதா மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இந்நிலையில் வீட்டின் பின் பக்கத்தில் உள்ள நார்த்தங்காய் மரக்கொல்லையில், சுடிதார் துப்பட்டாவால் தூக்கில் மாணவி ராதிகா பிணமாக தொங்கினார். இதை கண்ட சிலர் ராதிகாவின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர்.
 
அவர் அலறி அடித்து ஓடி சென்று பிணமாக தொங்கிய மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுபற்றி தகவல் கிடைத்ததும், நாகை போலீஸ் ஏடிஎஸ்.பி. மணிவண்ணன், சீர்காழி டி.எஸ்.பி. நவநீத கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுகுணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், தேவபாலன், ராஜேந்திரன் ஆகியோர் மாணவி ராதிகா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் ராதிகாவை அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது.   சீர்காழி நேரு காலனியை சேர்ந்தவர் அஜீத்குமார்(17). கட்டிட தொழிலாளி. இவர் மாணவி ராதிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக மாணவி ராதிகா வந்துள்ளார்.
 
இதை நோட்டமிட்டு அஜீத்குமாரும், அவரது நண்பர் சென்னையை சேர்ந்த விஜயும், பின் தொடர்ந்து சென்றுள்ளனர். வீட்டின் பின்புறம் உள்ள நார்த்தங்காய் மரகொல்லைக்கு காய்களை பறிக்க ராதிகா சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அஜீத்குமார், ராதிகாவை பார்த்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கு ராதிகா மறுப்பு தெரிவித்து அஜித்குமாரை கண்டித்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் உடனே ராதிகா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினார். பின்னர் ராதிகாவை, விஜய் பிடித்து கொள்ள அஜித்குமார் துப்பட்டாவால் மரத்தில் கட்டி ராதிகாவை தூக்கில் தொங்க விட்டார். இதில் சிறிது நேரத்தில் ராதிகா துடிதுடித்து இறந்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
மாணவியை கொன்ற அஜித்குமார், விஜய் ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்கள் 2 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்க மறுத்த மாணவியை நண்பனுடன் சேர்ந்து வாலிபர் கொன்ற சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே பயங்கரம்- மனைவியை வெட்டி கொன்ற கணவன்: நடத்தையில் சந்தேகத்தால் ஆத்திரம்

சீர்காழி, மார்ச். 4-
சீர்காழி அருகே நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை வெட்டி கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.   நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தாண்டவன்குளம் புதுநகரை சேர்ந்தவர் பாண்டியன். (வயது 50). அவரது மனைவி வெள்ளையம்மாள். (45). இவருக்கு ஏற்கனவே செல்லையன் என்பவருடன் திருமணம் நடந்து உள்ளது.
 
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து பாண்டியனை திருமணம் செய்தார். கடந்த சில நாட்களாக பாண்டியன் தனது மனைவி வெள்ளையம்மாள் நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். நேற்று கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர்.
 
நள்ளிரவு சமயம் வெள்ளையம்மாள் திடீர் என மாயமானார். அப்போது பாண்டியன் கண் விழித்து பார்த்த போது மனைவி மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே எழுந்து தேட ஆரம்பித்தார்.   அப்போது வெள்ளையம்மாள் அங்கு உள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டு இருந்தார். கோபத்தின் உச்சிக்கு சென்ற பாண்டியன் அரிவாளால் சரமாரியாக வெள்ளையம்மாளை வெட்டினார்.
 
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். அதனை பார்த்ததும் பாண்டியன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று காலை வெள்ளையம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாண்டியனை போலீசார் கைது செய்தனர்