சீர்காழி, ஜன. 12- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் ரெயிலடி தெருவைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மகன் மன்சூர் அலிகான் (36). இவர் சீர்காழி அருகே உள்ள நெப்பத்தூர் நெம்மேலி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகள் ராஜலட்சுமியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆசிகாபானு (3) என்ற மகளும் அசிகன் (2) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை மாமனார் வீட்டில் விட்டு விட்டு கடந்த 2 வருடத்திற்கு முன் மன்சூர் அலிகான் வெளி நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வைத்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் மன்சூர் அலிகான் ஊர் திரும்பினார். மாமனார் வீட்டிலே தங்கி இருந்தார். நேற்று பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக மன்சூர் அலிகானுக்கும் அவரது மாமனார் கலிய பெருமாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தை மனைவி மற்றும் மாமனார் முறையாக செலவு செய்யவில்லை என மன்சூர் அலிகான் குற்றம்சாட்டினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மன்சூர் அலிகான் இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த மாமனார் கலிய பெருமாளை கோடாரியால் சரமாரி வெட்டினார். இதனை ராஜலட்சுமி தடுக்க முயன்றார். அவருக்கும் கோடாரி வெட்டு விழுந்தது. கோடாரி வெட்டில் பலத்த காயம் அடைந்த கலிய பெருமாள் சம்பவ இடத்திலே இறந்தார். படுகாயம் அடைந்த ராஜலட்சுமி சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறிது நேரத்தில் அவரும் இறந்தார். இதுகுறித்து திருவெண்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி, சீர்காழி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட கலியபெருமாள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்வி வைத்தனர். மாமனார்- மனைவியை வெட்டி கொன்ற மன்சூர் அலிகான் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த இரட்டை கொலை சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.